Friday, February 14, 2014

RED SALUTE TO ALL OUR COMRADES !!

48 HOURS STRIKE ALMOST TOTAL IN TAMILNADU ! RED SALUTE TO ALL OUR COMRADES !!

 தமிழகத்தில்  அஞ்சல்  மற்றும் RMS  பகுதிகளில்
 48 மணி நேர வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி

வேலை நிறுத்தத்திற்கு இரவு பகல் பாராது , கண் துஞ்சாது  பாடுபட்ட அனைத்து மாநிலச் சங்கங்களின் அனைத்து  மாநில மட்ட, கோட்ட மட்ட/ கிளை மட்ட நிர்வாகிகளுக்கும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்அஞ்சல்  RMS இணைப்புக் குழுவின் , மாநில JCA  வின் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன  தமிழ் மாநில அமைப்பின்  நெஞ்சார்ந்த  நன்றி !

நமக்குக் கிடைத்த செய்திகளின் படியும் , பத்திரிகை, தொலைகாட்சி செய்திகளின் படியும்  இதுவரை  நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களையும் விட  இந்த வேலை நிறுத்தத்தில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிக்கும்  நூற்றுக்கு நூறு விழுக்காடு  என , எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்துகொண்டது  உண்மையிலேயே   நம் தமிழ் மாநில சங்கங்களுக்கு  பெருமை !  இது மட்டற்ற மகிழ்வை  ஏற்படுத்துகிறது ! . 

இது நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ! நிச்சயம்  நம் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு  பதில் சொல்லியே ஆக வேண்டும் ! கோரிக்கைகளில்  நாம் நிச்சயம்  வென்றே தீருவோம் !

மீண்டும்  அனைத்து பகுதி தோழர்களுக்கும் தோழியர்களுக்கும்  எங்கள்  நெஞ்சு நிறைந்த நன்றியை காணிக்கை  ஆக்குகிறோம் !
  

நம்முடைய  மாபொதுச்  செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களிடம்  தொலைபேசியில்  பேசும் போது  " TAMILNADU  STANDS  FIRST ! I  REALLY  APPRECIATE  THE WORK !  PLEASE  CONVEY MY CONGRATS TO ALL OUR COMRADES " என்று  மனம் திறந்த பாராட்டையும் வாழ்த்துகளையும்  தெரிவித்தார். அவருக்கும்  நம்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ! 

சில  பத்திரிக்கைகளை  வந்த செய்திகளை கீழே உங்கள் பார்வைக்கு   வைக்கிறோம்.  கோட்ட மற்றும் கிளைகளின்  ரீதியான வேலை நிறுத்த விபரங்களை தயவு செய்து  தமிழக  செய்து மூன்று சங்கத்திற்கு email மூலம் அனுப்பிடுமாறு  கோட்ட/ கிளைச் செயலர்களை வேண்டுகிறோம்.! நீங்கள்  எடுத்த புகைப்படங்களையும்  உங்கள் பகுதி பத்திரிகை செய்திகளின் நகல்களையும் SCAN செய்து  E MAIL அனுப்பிட வேண்டுகிறோம்.அனைத்தும் மாநிலச் சங்க வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும் !
============================================================

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தபால் சேவை பாதிப்பு

By நாமக்கல்

First Published : 13 February 2014 03:57 AM IST
கிராம அஞ்சல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் துறை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை தபால் விநியோகம் பாதிக்கப்பட்டன.
நாடு தழுவிய அளவில் கிராம அஞ்சலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஊதிய உயர்வை 1.1.2014 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கியது.
அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 2 தலைமை அஞ்சல் நிலையங்கள், 55 துணை அஞ்சல் நிலையங்கள், 285 கிளை அஞ்சல் நிலையங்களில் புதன்கிழமை 82 சத ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால், தபால் பட்டுவாடா பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.
மேலும், அரசுத் துறைகளின் தபால்கள் அனுப்புதல், பதிவு, விரைவு அஞ்சல், பணம் அனுப்புவது, கிராமக் காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் தொகை வசூல் செய்தல், அஞ்சலக சேமிப்பு வசூல், முதியோர்களுக்கு ஓய்வூதியம் விநியோகம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது:
15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதில், மொத்தம் உள்ள 968 அஞ்சல் துறை அலுவலர்கள், ஊழியர்களில் 114 பெண்கள் உள்பட 886 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அஞ்சல் நிலையங்களில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தவிர, அஞ்சல் காப்பீட்டு சேமிப்பு கணக்குகள், கிராம காப்பீட்டுத் திட்டம் மூலம் நாள்தோறும் நடைபெறும் சுமார் ரூ.5 கோடி அளவிலான பணப் பரிவர்த்தனைகளும், வசூல் பணிகளும் நடைபெறவில்லை என்றனர்..... தினமணி  செய்தி.
============================================

மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்: அஞ்சல் துறை, வருமான வரித் துறை பணிகள் பாதிப்பு

First Published : 13 February 2014 04:25 AM IST
மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மதுரையில் அஞ்சல் துறை, வருமான வரித் துறை அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
  ஏழாவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும், 50 சதவீத பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும், ஊதிய வரையறைக்குள் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களையும் கொண்டு வர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டதைத் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி புதன், வியாழன் (பிப்.12 மற்றும் 13) இருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அழைப்பு விடுத்தது.
 இப் போராட்டத்தில் அஞ்சல் துறை, வருமானவரி, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்தன.
 இதன்படி, மதுரையில் அஞ்சல் துறை, வருமான வரித் துறை, கலால் துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அஞ்சல் துறையைப் பொருத்தவரை தபால் நிலையங்கள் முழுமையாகச் செயல்படவில்லை. ஓரிரு தபால் நிலையங்கள் திறந்திருந்தாலும் பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மதுரை (மீனாட்சி பஜார்), தல்லாகுளம், அரசரடி ஆகிய தலைமை தபால் நிலையங்கள் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  அகில இந்திய தபால் ஊழியர் சங்கங்களான என்.எப்.பி.இ. மற்றும் எப்.என்.பி.இ. சங்கங்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்றனர். தல்லாகுளம் தபால் அலுவலகத்தில் இருந்து மட்டும் விரைவு தபால் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மற்ற தபால் நிலையங்களில் ஸ்டாம்ப் விற்பன உள்ளிட்ட இதர சேவைகள், தபால் பட்டுவாடா நடைபெறவில்லை. இப் போராட்டம் வியாழக்கிழமையும் நடைபெறும் என்று என்.எப்.பி.இ. கோட்டச் செயலர் எஸ்.சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.  வருமான வரித் துறை ஊழியர் சங்கம் முழு அளவில் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. ஏறத்தாழ 170 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர் என்று வருமான வரி ஊழியர் சங்க ஒருங்கிணைப்புச் செயலர் ஆர்.ஷியாம் தெரிவித்தார்.
==============================================

ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் 477 தபால் நிலையங்கள் மூடல்

First Published : 13 February 2014 01:15 AM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட தபால் துறை அலுவலர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 477 தபால் நிலையங்கள் மூடப்பட்டன.
 ஐம்பது சதவீத அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத்துடன் இணைத்து பென்ஷன் வழங்க வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவை 2014 ஜனவரி முதல் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள 12 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி, புதன்கிழமை (பிப்ரவரி 12) இப்போராட்டம் தொடங்கியது.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி தலைமை தபால் நிலையங்கள், 73 கிளை தபால் நிலையங்கள், 402 கிராமப்புற அஞ்சலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மாவட்டத்தில் மொத்தமுள்ள 477 தபால் நிலையங்களும் புதன்கிழமை காலை முதலே மூடப்பட்டு இருந்தன.
பொதுமக்கள் அவதி: வழக்கம்போல, கடிதங்களை அனுப்பவும், பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேநேரத்தில், தனியார் கூரியர் நிறுவனங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.
================================================

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

First Published : 13 February 2014 03:40 AM IST
செஞ்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடத்தினர்.
 7-வது ஊதியக் குழுவிற்கான ஆய்வு எல்லை வரையரை ஏற்கப்படவேண்டும். ஊழியர்களின் ஊதியக்குழு மாற்றியமைக்க வேண்டும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை இலாகா ஊழியர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செஞ்சி தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு தபால் ஊழியர்கள் சங்க உதவிச் செயலர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில உறுப்பினர் தங்கராஜ், பி.எஸ்.எல்.என்.சுடரொளிசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
  கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கச் செயலர் சேகர், தையூர் குமார், மற்றும் வெங்கடேசன்
உள்ளிட்ட அஞ்சல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
  இதனால் செஞ்சி மற்றும் செஞ்சி வட்டாரத்தில் உள்ள 99 தபால் நிலையங்கள், 11 துணை அஞ்சல் நிலையங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
============================================

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தபால் விநியோகம் பாதிப்பு

First Published : 13 February 2014 05:35 AM IST
அஞ்சல் துறை ஊழியர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தம் செய்ததால், தபால் விநியோகம் பணி பாதிக்கப்பட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய வேண்டும்; விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் துறையினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை துவங்கிய இந்தப் போராட்டத்தால், தபால்கள் விநியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமை போராட்டம் நடைபெறவுள்ளது.
முன்னதாக, திருப்பூர் அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஒய்வூதியர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர் கோட்டக் கிளைகள், மேட்டுப்பாளையம், தாராபுரம் கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
================================================

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தபால் சேவைகள் பாதிப்பு

First Published : 13 February 2014 04:05 AM IST
அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புதன்கிழமை தபால் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஊதிய உயர்வு, பணிநிரந்தம், 7-ஆவது ஊதியக் குழுவை விரைந்து உருவாக்கி, அதில் சங்கத்தின் தலைவரை பிரதிநிதியாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்றது.
தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம், தருமபுரி கோட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்களில் பணிபுரியும் சுமார் 80 சத ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால், விரைவுத் தபால், பதிவுத் தபால் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன.
வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, பெரும்பாலான அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், தலைமை அலுவலகம், துணை அஞ்சல் அலுவலகங்கள் திறந்திருந்தன. ஊழியர்கள் பணிக்கு வராததால், இந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகிறது
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்டத்தில் தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் 200 அஞ்சல் நிலையங்களில் தபால் பட்டுவாடா பணிகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியது. கிராம காப்பீட்டுத் திட்டத்தில் தவணைத் தொகை வசூல் செய்தல், அஞ்சலக சேமிப்பு வசூல், முதியோர் ஓய்வூதியம் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு சேவைப் பணிகள் பாதிக்ப்பட்டன.
இதுகுறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் சங்க கிருஷ்ணகிரி கோட்டச் செயலாளர் எஸ்.செல்வம் கூறியது:
கிருஷ்ணகிரி கோட்டத்தில் இந்த வேலை நிறுத்தத்தால் அஞ்சல் துறையின் 80 சதப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர் என்றார் அவர்.
==========================================

No comments:

Post a Comment