Thursday, February 13, 2014

சேலம் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

சேலம் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது



சூரமங்கலம்,
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் சேவை பாதிப்புக்குள்ளானது.
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நீதிபதி தல்வார் குழு பரிந்துரைகளின் படி ஜி.டி.எஸ். ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், ஜி.டி.எஸ். பதவிகளை இலாகா பதவிகளாக மாற்றிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இந்திய தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று முதல் 2 நாட்கள் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
 சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் தபால்காரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. சேலத்தில் துணை, கிளை தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன.சாதாரண தபால், பதிவு தபால், விரைவு தபால், பார்சல் தபால் போன்றவை தேங்கி கிடக்கிறன. இதனால் தபால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
சேலம் சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேசிய தபால் ஊழியர் சம்மேளன மாநில தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், பரமசிவம், முருகேசன், சஞ்சீவி, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தபால் ஊழியர்கள் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 2–வது நாளாக தொடர்கிறது.


No comments:

Post a Comment