புதன்" அன்று "செவ்வாய்" ஐ தொட்ட மங்கள்யான்
செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யான்: இந்தியாவின் வெற்றிகரமான சாதனை
பெங்களூரு: இந்தியாவின் "பட்ஜெட்"விண்கலமான மங்கள்யான், இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில்நுழைந்தது. காலை 7.41மணிக்கு செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.கடந்த2013ல் செப்.,5ல் துவங்கிய 325 நாள் பயணம் நிறைவடைந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நுழைந்து பல புதிய சாதனைகளையும் அது படைக்கும்.
திரவ இயந்திரம் இயக்கம்:
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை நிலை நிறுத்த திரவ இயந்திரம் தொடர்ந்து24 நிமிடங்கள் இயக்கப்பட்டது. நேற்றைய சோதனையின் மூலம் இரண்டு விஷயங்களை இஸ்ரோ சாதித்துள்ளது. அதாவது என்ஜினும், விண்கலமும் சரியாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். 2வது மங்கள்யான் விண்கலத்தை செவ்வாயின் சுற்றுப் பாதைக்கு வெகு அருகே கொண்டு செல்ல முடிந்துள்ளது.பெரிய ராக்கெட் மோட்டார் தவிர, எட்டு சிறிய ரக திரஸ்டர்களும் மங்கள்யானுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பெரிய ராக்கெட் மோட்டார் செயல்படாமல் போனால், இந்த திரஸ்டர்களை இயக்கி அதன் உதவியுடன், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யானை விஞ்ஞானிகள் நிலை நிறுத்த ஏற்பாடு செய்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் நிலை நிறுத்தப்படுவதால் அதன் குறைந்தபட்ச தூரமானது செவ்வாயிலிருந்து 423கிலோமீட்டர் உயரமாக இருக்கும். அதிகபட்ச தூரமானது 80,000 கிலோமீட்டராக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரக சுற்றுப் பாதைக்குள் நுழைந்த முதல் விண்கலம் என்ற பெருமையும் மங்கள்யானுக்கு கிடைகத்துள்ளது.இதை சரியாக செயல்படுத்திய நான்காவது நாடு என்ற பெருமையும் நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா, ரஷ்யா ஆகியவைதான் இதை சாதித்துள்ளன.
நேரில் பார்வையிட்டார் பிரதமர் மோடி :மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலைநிறுத்தப்படும் நிகழ்ச்சியை இஸ்ரோ விண்வௌி ஆராய்ச்சி மையத்தி்ல் இருந்து நேரடியாக பார்வையிடுட்டார் நரேந்திர மோடி. அவருடன் கர்நாடக முதல்வரும் உடன் இருந்தார்.
பிரதமர் வாழ்த்து : செவ்வாய் சுற்றுவட்டபாதையில் மங்கயான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட உடன், அதற்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
மங்கள்யான் "ஹீரோ'க்கள்
கடந்த நவ., 5ல், பி.எஸ்.எல்.வி., சி25 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்ட மங்கள்யான் - விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இது இந்தியா செவ்வாய்க்கு அனுப்பிய முதல் விண்கலம். முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ராதாகிருஷ்ணன்
இஸ்ரோ தலைவர் மற்றும் இந்திய விண்வெளி துறையின் செயலராக இருக்கிறார். இஸ்ரோவின் அனைத்து விதமான திட்டங்கள், செயல்பாடுகளுக்கு இவரே முதல் பொறுப்பு. இது ஒரு புதுமையான மற்றும் சவாலான பணியாக இருப்பினும், இந்த புதிய விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். கேரளாவின் திருச்சூரை சேர்ந்த இவர் படித்தது எலக்ரிக்கல் இன்ஜினியரிங். பெங்களூர் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்தார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியில் சேர்ந்தார். ஐ.ஐ.டி., காரக்பூரில் 2000ல் பி.எச்டி பட்டம் பெற்றார். 2009 அக்., 31ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றார். 40 வருட விண்வெளி துறை அனுபவம் உடையவர். இஸ்ரோவில் பல்வேறு பணிகளை வகித்துள்ளார்.
அண்ணாதுரை
மங்கள்யான் திட்ட இயக்குநராக இருப்பவர். தமிழகத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் 1982ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார். ரிமோட் சென்சிங் தொடர்பான விண்கல ஆராய்ச்சியில் முதன்மை வகிக்கிறார். இவர் இந்த விண்கலத்துக்கான செலவு, விண்கலத்தின் கட்டமைப்பு, அது செல்லும் திசை,செலுத்துவதற்கான நேரம், விண்கலத்துக்கு தேவையான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பு வகித்தார். இவர் ஏற்கனவே இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குநராகவும் இருந்தார்.
இது இந்தியா மற்றொரு கோளுக்கு அனுப்பிய முதல் விண்கலம். எனவே இவை அனைத்தும் புதுமையானது. பூமிக்கும், செவ்வாய்க்கு இடையிலான காலநிலை போன்றவற்றை பலமுறை கணித்து, விண்கலம் ஏவக்கூடிய தருணத்தை குறித்தது இவர் தான்.
ராமகிருஷ்ணன்
இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். மங்கள்யான் விண்கலம் செலுத்தும் பொறுப்புக்குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 1972ல் இஸ்ரோவில் சேர்ந்தார். பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மேம்பாட்டு வளர்ச்சியில் இவர் பணி மகத்தானது. ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் மற்றும் ராக்கெட் ஏவுவதற்கான நிலைகள் ஆகியவற்றை கணிப்பது இவரின் பணி. மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் வடிவமைத்தற்கு இவர் தான் பொறுப்பு.
இது குறித்து அவர் கூறியது: செவ்வாய்க்கு நாம் அனுப்பிய விண்கலம், முற்றிலும் நமது உள்நாட்டு உபகரணங்களை வைத்து தயாரித்ததில் பெருமை. இந்த பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுதற்கான மொத்த நேரம் 48நிமிடமாக இருந்தது. மற்ற பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவுவதற்கான நேரத்தை விட, இது இருமடங்கு.
***எஸ்.கே. சிவக்குமார்
மைசூருவை சேர்ந்த இவர் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் இயக்குநராக இருக்கிறார். இவர் 1976ல் இஸ்ரோவில் சேர்ந்தார். இந்திய செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், திட்டமிடுதல்; இயக்குதல் போன்றவற்றில் இவரது பணிகள் அதிகம். இஸ்ரோ முதன் முதலாக உள்நாட்டு தயாரிப்பில் வெற்றிகராமாக அனுப்பிய செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர் இவரே.
மங்கள்யான் வெற்றி குறித்து இவர் கூறியது; "செவ்வாயில் நமது குழந்தை தவழ்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு குழந்தைக்கான ஆப்பரேஷன் போலத் தான் இருந்தது' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
பி.குன்ஹிகிருஷ்ணன்
பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் திட்ட இயக்குநராக ஒன்பதாவது முறையாக பதவி வகிக்கிறார். இவர் 1986ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட 8 பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளின் மிஷன் திட்ட இயக்குநராக இருந்தார். நவ., 5ல் மங்கள்யான் விண்கலம் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., சி25/மார்ஸ் ராக்கெட்டின் திட்ட இயக்குநரும் இவரே. ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து, அதிலிருந்து செயற்கைக்கோள் சரியாக பிரிந்து சுற்றுவட்டப்பாதையில் இணையும் வரை நடக்கும் நிகழ்வுகளுக்கு இவரே பொறுப்பு.
மற்ற ராக்கெட்டுகளை இந்த மங்கள்யான் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பு, காலநிலை மற்றும் ஏவுவதற்கான கால நேரம் உள்ளிட்ட விஷயங்கள் இவருக்கு சவாலாக அமைந்தது.
சந்திரடாதன்
இவர் எரிபொருள் ஒழுங்குமுறை அமைப்பின் திட்ட இயக்குநர். 1972ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். இவர் எஸ்.எல்.வி., - ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பங்காற்றினார். முப்பது ஆண்டுகளாக எஸ்.எல்.வி., - 3, ஏ.எஸ்.எல்.வி.,மற்றும் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.
ஏ.எஸ்.கிரண்குமார்
செயற்கைக்கோள் அப்ளிகேஷன் மையத்தின் திட்ட இயக்குநராக இருக்கிறார். இவர் 1975ல் இஸ்ரோவில் சேர்ந்தார். எலக்ட்ரோ - ஆப்டிகல் இமேஜிங் சென்சாரின் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது. சந்திராயன் - 1 விண்கலத்திலும் இவரது பணி இருந்தது. ராக்கெட்டின் மூன்றுவிதமான இயங்குதிறனுக்கு (மார்ஸ் கலர் கேமரா, மீத்தேன் சென்சார், தெர்மல் இன்பிராரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோமீட்டர்) இவரே பொறுப்பு.
எம்.ஒய்.எஸ்.பிரசாத்
சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார். 1975 - 1994 வரை இஸ்ரோவின் லாஞ்ச் வெகிக்கிள் வளர்ச்சி பணியில் பணியாற்றினார். டி-டாம் மற்றும் எஸ்.எல்.வி., - 3 (நாட்டின் முதல் உள்நாட்டு தயாரிப்பு ராக்கெட்) ஆகிய திட்ட பணியில் இவரது பங்கு முக்கியமானது. 1998 - 2005 வரை இஸ்ரோவின் முதன்மை கட்டுப்பாட்டு வசதியின் இயக்குநராக இருந்தார். ராக்கெட்டின் பாதுகாப்பு திறன்களுக்கு இவரே பொறுப்பு.
எஸ்.அருணன்
திருநெல்வேலியை சேர்ந்த மங்கள்யான் திட்டப்பணியின் இயக்குநர். மங்கள்யான் விண்கல வடிவமைப்பு குழுவில் இவரும் ஒருவர்.
மங்கள்யான் விண்கலத்தின் தயாரிப்பில் பல்வேறு சவலான பணிகளை மேற்கொண்டார். 300 நாட்களுக்குப்பின்,மீண்டும் இயக்கக்கூடிய வகையில் இந்த மங்கள்யானில் சோலார் மின்திறன் செல்; மற்றும் புதிய நேவிகேஷன் மையம் ஆகியவற்றை வடிவமைத்தார்.
மங்கள்யான் விண்கலத்தை தயாரித்தது முதல் ஏவியது வரை ஆன செலவு 454 கோடி ரூபாய். மங்கள்யான் பயணம் செய்த தூரம் 68 கோடி கி.மீ., அதாவது, மங்கள்யான் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய ஆன செலவு சராசரியாக 6.70 ரூபாய் மட்டுமே. இது ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு. அவ்வளவு சிக்கனமாக நமது விஞ்ஞானிகள் இதை சாதித்துக் காட்டி உள்ளனர்.
“Gravity” ஆங்கில படத்தின் செலவை விட குறைவு.
Source : Dinamalar Dt. 24.9.2014.
No comments:
Post a Comment