திரவமயமான பிராணவாயுவை பறக்கும்போது ராக்கெட் பயன்படுத்துவதற்குப் பதிலாக விண்வெளியிலிருந்தே பிராணவாயுவை எரிபொருளாக எடுத்துக்கொள்ளும் ராக்கெட் தொழில்நுட்பத்தை இஸ்ரோ சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் கூறும்போது, “இந்த தொழில்நுட்பம் ஜூன் மாதம் அல்லது ஜூலை தொடக்கத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் அறிமுகம் செய்யப்படலாம்” என்றார். 

பொதுவாக செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டுகளில் ஆக்சிடைசர் மற்றும் எரிபொருளுடன் கூடிய உந்துசக்தி பயன்படுத்தப்படும். ஆனால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் படி ராக்கெட்டுகள் விண்வெளியில் உள்ள பிராணவாயுவையே எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். 

இந்த தொழில்நுட்பம் வெற்றியடைந்தால் திரவவடிவ பிராணவாயுவுடன் கூடிய எடைகூடிய ராக்கெட்டுக்குப் பதிலாக குறைவான எடையுடன் கூடிய ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடியும் என்று விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் மேலும் கூறினார். ஏனெனில் திரவவடிவ பிராணவாயுவை ராக்கெட்டுகள் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இதன் மூலம் ராக்கெட்டின் திறன் அதிகரிப்பதோடு செலவுகளும் குறையும் என்றார் அவர்.

சூரிய ஆற்றலை செயற்கைக் கோள்கள் பயன்படுத்திக் கொள்வது போல் விண்வெளியில் குறிப்பிட்ட தூரம் வரை உள்ள ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளும் திட்டமாகும் இது.
ஐ.எஸ்.ஆர்.ஓ. செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட் தொழில்நுட்பத்தின் செலவுகளைக் குறைக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆய்வு மையம் வளர்த்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.