பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம்: தமிழக அஞ்சலகங்களில் அறிமுகம்.
மத்திய அரசின் பெண்
குழந்தைகளுக்கான பிரத்யேக வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் தமிழக அஞ்சலகங்களிலும்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின்
அலெக்ஸாண்டர் கூறினார்.
மயிலாப்பூர் தலைமை
அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இத் திட்ட அறிமுக விழாவில், சென்னை
நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசியதாவது:
பெண் குழந்தைகள்
மேம்பாட்டுத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி யோஜனா) ஹரியாணா மாநிலம், பானிபட்
நகரில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ், 10 வயதுக்குள்பட்ட
பெண் குழந்தைகள் காப்பாளர் உதவியுடன் சேமிப்புக் கணக்கு தொடங்க முடியும்.
கணக்கு தொடங்குவதற்கு ரூ.1,000 குறைந்தபட்ச
தொகையாகும். அதைத் தொடர்ந்து, ரூ.100 அல்லது
அதன் மடங்குகளில் பணம் செலுத்தலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம்.
கணக்கு தொடங்கிய நாள்
முதல் 14 ஆண்டுகள் பணம் செலுத்தலாம். இதற்கான வட்டி விகிதம் 9.1 சதவீதமாகும். இது வேறு எந்த ஒரு சேமிப்புக் கணக்கு திட்டத்துக்கும் இல்லாத
சிறப்பாகும்.
ஒரு மாதம் அல்லது ஆண்டில்
எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.
மேலும், கணக்கு
வைத்திருக்கும் பெண் குழந்தைக்கு 18 வயது முடிந்த பின்,
கடந்த கணக்கு ஆண்டு இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக 50
சதவீதம் வரை பணம் பெற்று கொள்ளும் வசதியும், விருப்பத்தின்
பேரில் மாதாந்திர வட்டி பெறும் வசதியும் உள்ளது.
இத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில்
இந்தியா முழுவதும் ஒரு கோடி வங்கிக் கணக்குகளும், தமிழக
அஞ்சல் வட்டத்தில் 4.5 லட்சம் கணக்குகளும், சென்னை நகர மண்டலத்தில் 1.10 லட்சம் கணக்குகளும்
தொடங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில்
"சுகன்யா சம்ருத்தி யோஜனா' திட்டத்தின் கீழ் அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்குத்
தொடங்கிய 16 மாதக் குழந்தை உள்பட 10 பேருக்கு
சேமிப்புக் கணக்குப் புத்தகத்தை மெர்வின் அலெக்ஸாண்டர் வழங்கினார்.
No comments:
Post a Comment