நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 648 கிளைகளை வரும் 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார் என தொலைதொடர்பு துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தியாவில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களையும் பேமெண்ட் வங்கியுடன் இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் நிதிச்சேவை கிடைக்கும். ஒவ் வொரு கிராமங்களிலும் கிளைகள் இருப்பதால் பெரும்பாலான மக் களுக்கு வங்கி சேவை வழங்க முடியும் என அவர் கூறினார்.
இதுதொடர்பாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சேத்தி கடந்த வாரம் கூறியதாவது: ஆரம்பத்தில் 650 கிளைகளுடன் சேவை தொடங்கப்படும். இது தவிர 3,250 தபால் நிலையங்களில் பேமெண்ட் சேவை மையம் இருக்கும். நாடு முழுவதும் 11,000 தபால்காரர்கள் மூலம் வங்கி சேவை வீடுகளுக்கே சென்றடையும். அதேபோல நாடு முழுவதிலும் உள்ள 17 கோடி தபால் சேமிப்பு கணக்குகளை, வங்கி சேமிப்பு கணக்குகளாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது என்றார்.
ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது நிறுவனம் இந்திய தபால் துறையாகும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல ஆர்டிஜிஎஸ், என்இஎப்டி, ஐஎம்பிஎஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகள் செய்வதற் கான அனுமதியும் வழங்கப் பட்டிருக்கிறது. மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சம்பளம், மானியம் மற்றும் பென்ஷனை இனி இந்தியா போஸ்ட் பெமெண்ட் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம்.
வங்கிக்கான தொடங்க நாளிலே இதன் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் செயலி மூலம் டெலிபோன் ரீசார்ஜ், டிடிஹெச், கல்லூரி கட்டணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment