Saturday, February 14, 2015

விரைவில் மீண்டும் புழக்கத்தில் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு : ரிசர்வ் வங்கி



புதுடெல்லி: இருபது ஆண்டுகளுக்கு பின், வரும், 2015ம் ஆண்டு, ஜனவரி முதல், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. பழைய ஒரு ரூபாய் நோட்டு, அடர்த்தியான, வெளிர் நீல வண்ணத்தில் இருக்கும். புதிய ஒரு ரூபாய் நோட்டு, ஊதா மற்றும் பச்சை நிறத்தில் வெளியாக உள்ளது. நோட்டின் மேல் விளிம்பில், 'பாரத் சர்க கார்' என்ற வாசகமும், அதன் கீழ் இந்திய அரசாங்கம் என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

இதுகுறித்து, 'ஒரு ரூபாய் கரன்சி நோட்டுகள் அச்சடிப்பு விதிகள், 2015' என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு அதிகரித்ததாலும், அப்பணிக்கு நிகராக, அதிக மதிப்புள்ள கரன்சிகளை கூடுதலாக அச்சிடலாம் என, 1994ம் ஆண்டு, மத்திய அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து, அவ்வாண்டு நவம்பருடன், ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 1995ம் ஆண்டு பிப்ரவரியில், 2 ரூபாய் மற்றும் அதே ஆண்டு நவம்பரில் 5 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. 

அதற்கு பதிலாக, நாணயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், இன்னும் பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில், செல்லத்தக்கவையாக உள்ளன. இந்நிலையில், சில்லரை தட்டுப்பாடு, நாணயங்களை உருக்குவது உள்ளிட்ட பிரச்னைகளால், மத்திய அரசு, மீண்டும் ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மத்திய அரசு வெளியிடுவதால், புதிய ஒரு ரூபாய் நோட்டில், நிதி செயலரின் கையெழுத்து இருக்கும். ரிசர்வ் வங்கி வெளியிடும், 2, 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment