ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யிலிருந்து பிளஸ் டூ-வாக உயர்த்தப்பட்டுள்ளது.
எழுத்தர், டிக்கெட் கலெக்டர் உள்ளிட்ட குரூப்-சி பதவிகளுக்கு இந்த புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே துறை திகழ்கிறது. இதில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமை இந்திய ரயில்வே துறைக்கு உண்டு.

ரயில்வே துறையில் குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தேர்வு செய்வதற்காக சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும் 21 ரயில்வே தேர்வு வாரியங்கள் இயங்கி வருகின்றன. அலுவலக எழுத்தர், கணக்கு எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், ரயில் எழுத்தர், நூலக எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் குரூப்-சி பதவிகளாக கருதப்படுகின்றன.

இதுவரை, குரூப்-சி பணிகளுக் கான குறைந்தபட்சக் கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யாக இருந்து வந்தது. அதில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு மட்டும் மதிப்பெண் வரையறை கிடையாது.

இந்நிலையில், மேற்கண்ட குரூப்-சி பணிகளுக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியை பிளஸ் டூ-வாக உயர்த்தி ரயில்வே தேர்வு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறைந்தபட்ச மதிப்பெண் விதிமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

அடிப்படைச் சம்பளம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.1900 மற்றும் ரூ.2,000 கொண்ட குரூப்-சி பதவிகளுக்கான கல்வித்தகுதி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர் பாக ரயில்வே வாரியத்திடமிருந்து உத்தரவு வந்திருப்பதாகவும், இந்த உத்தரவு, புதிய நியமனங்களுக்கு பின்பற்றப்படும் என்று சென்னை ரயில்வே தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

17.12.2014-க்கு முன்பு வெளியான பணி நியமன அறிவிப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. அதற்கு பழைய கல்வித்தகுதியே பின்பற்றப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
நன்றி. தி இந்து தமிழ் நாளிதழ்