தமிழகத்தில் சிறந்த தபால் காரருக்கான விருதுகள் 3 பேருக்கு வழங்கப்பட்டன.
தேசிய அஞ்சல் வாரம் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று ‘வணிக வளர்ச்சி தினம்’ கொண்டாடப்பட்டது. தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 9 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

ஒசூரைச் சேர்ந்த எஸ்.ஸ்ரீநிவாச ராவ், சேலம் எஸ்.வள்ளி, சென்னை கமலேஸ்வர ராவ் ஆகியோர் சிறந்த தபால்காரர் விருதுகளை பெற்றனர். 31 வயதாகும் எஸ்.வள்ளி கடந்த 11 ஆண்டுகளாக தபால்துறையில் பணிபுரிந்து வருகிறார். விருது பற்றி அவர் கூறும்போது, ‘‘தபால்காரர் சீருடையை அணிந்து பணிக்கு செல்லும்போது அனைத்து இடங்களிலும் மரியாதை யாக நடத்துகிறார்கள். இளம் வயதிலேயே எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது’’ என்றார்.

ஸ்ரீநிவாச ராவ் கூறும்போது, “ஏழை, பணக்காரர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் ஒரேவிதமான சேவை வழங்கி வருவது தபால் துறை மட்டும்தான். இந்தப் பணியில் இருக்கும்போது பலருக்கு பணி நியமன கடிதங்களையும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கடிதங்களையும் எனது கையால் கொடுத்திருக்கிறேன் என்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் அஞ்சல் சேவைகள் துறையின் முன்னாள் உறுப்பினர் வத்சலா ரகு, தமிழ்நாடு வட்டார தலைமை தபால் அதிகாரி த.மூர்த்தி, சென்னை வட் டார தபால் சேவைகள் இயக்கு நர்கள் ஜே.டி.வெங்கடேஸ்வரலு, ராமலிங்கம், ஏ.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source : The Hindu Tamil.