Wednesday, October 23, 2013

TN AIPEU GDS NFPE FIRST CIRCLE COUNCIL

TN AIPEU GDS NFPE FIRST CIRCLE COUNCIL MEETING HELD ON 17.10.2013

தமிழக AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் மாநில கவுன்சில் கூட்டம் கடந்த 17.10.2013 அன்று சென்னை எழும்பூர் SRMU  சங்கக் கட்டிடத்தின்  நக்கீரன் அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது . அதன் மாநிலத் தலைவர் தோழர் R . ராமராஜ் அவர்கள் தலைமை வகிக்க , சென்னை வட கோட்டத்தைச் சேர்ந்த தோழர். லீலாராமன் (செயலர்)  வரவேற்புரை யாற்ற  , NFPE  சம்மேளனத்தின் உதவி மாபொதுச்  செயலர் தோழர். S . ரகுபதி அவர்கள் மிகச் சிறப்பானதொரு துவக்கவுரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து  கூட்டத்தின் நோக்கம் , மாநிலச் சங்கத்தின்  செயல்பாடுகள், மத்திய சங்க நிகழ்வுகள் ,  நம்முன்னே உள்ள கடமைகள் , எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய  பேரணி உள்ளிட்ட தகவல்களுடன் ஒரு நீண்ட எழுச்சி யுரையினை  அதன் மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வழங்கினார்கள் .

இதர மாநிலச் சங்க நிர்வாகிகள்  ஸ்ரீரங்கம்  தோழர்.R . விஷ்ணுதேவன், பவானி மகாலிங்கம் , பட்டுக்கோட்டை இளங்கோவன், மதுரை  ராஜசேகர், சேலம் மேற்கு  சண்முகம், தாம்பரம் விஜயகுமார், பாண்டிச்சேரி கலிய முர்த்தி , திருவண்ணாமலை முனுசாமி ஆகியோர்   கலந்துகொண்டு  விவாதத்தை மெருகேற்றினர் .  இது தவிர 32 கிளைகளை இருந்து  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

அஞ்சல் மூன்று மாநிலத்  தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். J .R ., மாநில நிதிச் செயலரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் A . வீரமணி,  அஞ்சல் மூன்று அகில இந்திய செயல் தலைவர் தோழர்  N .G . , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். V . ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர். 

இது தவிர அஞ்சல் மூன்று அம்பத்தூர் கிளையின் முன்னாள் தலைவர்கள், தோழர்  நரசிம்மலு, தோழர் முருகன், திண்டுக்கல் தோழர்.  மருதை ஆகி யோரும் கலந்து கொண்டனர் . 

கூட்டத்தின் தீர்மானங்களில்  முக்கியமாக ,  ஒவ்வொரு கோட்டத்தில் இருந்தும்   GDS  தோழர்கள் 15 பேருக்கு குறையாமலும் , இதர அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு R 3, R 4 உள்ளிட்ட சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட கிளைச் செயலர்கள் அனைவரும் முழு வீச்சில்  எதிர்வரும் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு  ஊழியர்களை திரட்டிட  வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது .

இத்தகைய கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த சென்னை வடகோட் டத்தைச் சேர்ந்த P 3/GDS  சங்க நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் நன்றி முழுவதுமாக உரித்தாக்கப் பட்டது .

குறிப்பு :-

1. நமது  அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்த பாராளுமன்றம் நோக்கிய பேரணியில்  விடுதல் இன்று  கண்டிப்பாக கலந்து கொண்டிட வேண்டும். 

2.  மேலும் அனைத்து அஞ்சல் மூன்று  கோட்ட/ கிளைச் செயலர்களும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுகிறோம். இதர முன்னணித் தோழர்களையும்  GDS  தோழர் களையும்  ஒன்றிணைத்து , உடனடியாக இரயில்  டிக்கெட்  முன்பதிவு செய்திட வேண்டுகிறோம். இறுதியில் செய்தால் நிச்சயம்  டிக்கெட் CONFIRM  ஆகாது என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். 

3. இதற்கான பொறுப்புகளை அஞ்சல் மூன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டு மாநிலச் சங்கத்திற்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் பதிலை எதிர்பார்க்கிறோம்.

Saturday, October 12, 2013

MEMORANDUM TO RAJYA SABHA

SUBMISSION OF MEMORANDUM TO RAJYA SABHA PETITION COMMITTEE THRO' Sh. N. BALAGANGA , M.P. RAJYA SABHA ON GDS ISSUES

ராஜ்ய சபா  முறையீட்டுக் குழுவுக்கு  GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்க  கோரிக்கை மனு . 
இந்த மனு மீது RAJYA SABHA PETITION COMMITTEE பரிசீலனை மற்றும் உரிய விசாரணை செய்து அதன் பரிந்துரைகளை  பிரதம அமைச்சருக்கு அளித்திட அதிகாரம் உள்ளது என்பதையும் அதன் மீது பிரதம அமைச்சர் அமைச்சரவைக் குழுவுக்கு  முடிவுகளை தெரிவிக்க வேண்டியது அரசியல் சாசன விதி ஆகும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
 09.10.2013  அன்று காலை சுமார் 12.00  மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலர் தோழர். J.R. அவர்களும்  மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A. வீரமணி அவர்களும் மற்றும் தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலச் செயலரும், அதன் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும் 



 அகில இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை  உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், அதன்  வட சென்னை (தெற்கு ) மாவட்டச் செயலருமான  

திருமிகு . நா. பாலகங்கா  

அவர்களை அவரது  எழும்பூர் இல்லத்தில்  GDS ஊழியர்களின்  பிரச்சினைகள் குறித்தும் , அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட உள்ள வழிமுறைகள் குறித்தும் அதன் சட்ட ரீதியான விபரங்கள் குறித்தும்  , ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய  மற்றும் பணித்தன்மைகளை பரிசீலித்திட வேண்டியும்  இந்திய நாட்டின் மாநிலங்களவை தலைவரிடம் அளிப்பதற்கான -  PETITION COMMITTEE க்கான - (RAJYA SABHA PETITION COMMITTEE) மனுவினை அளித்தார்கள் . அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தின்  நகலை  கீழே பார்க்கவும்.

புகைப் படம் இடமிருந்து வலமாக  :- 

திருமிகு. நா. பாலகங்கா, தோழர். J.R., தோழர். A. வீரமணி,  
தோழர். R. தனராஜ் .

Saturday, October 5, 2013

DASARA GREETINGS

தபால் ஊழியர்கள்

தபால் ஊழியர்கள்  
புதிய தலைமுறைக்காக ஆ.பழனியப்பன்

இணையம், மின்னஞ்சல், அலைபேசி என தகவல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்த நிலையிலும், தபால் சேவைக்கான அவசியமும் தேவையும் இன்னும் குறையவில்லை. கவுன்சலிங் தகவலுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், இன்டர்வியூவை எதிர்நோக்கும் இளைஞர்கள், ஓய்வூதியத்தை எதிர்பார்க்கும் முதியோர்கள் என தபால்காரர்களின் வருகைக்காக தினமும் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல கோடி. ஆகையால்தான், ஒன்றரை லட்சம் அஞ்சலகங்களுடன், உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறையாக இந்திய அஞ்சல் துறை திகழ்கிறது.
ஆறு லட்சம் ஊழியர்களின் மகத்தான உழைப்பு இல்லாமல், இத்தகைய பெருமைக்கும், வளர்ச்சிக்கும், சாதனைக்கும் சாத்தியமே இல்லை. மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும், மக்களைத் தேடித் தேடி அவர்கள் ஆற்றி வருகிற சேவை போற்றத்தக்கது. அதேவேளையில், மக்கள் சேவகர்களாகி தபால் ஊழியர்கள் நாள்தோறும் சந்திக்கும் சவால்களும், படும் சிரமங்களும் ஏராளம்.


சமூக அக்கறையும் சவால்களும்
‘ஏதோ, வாங்குகிற சம்பளத்திற்கு வேலையை செய்துவிட்டுப்போவோம்’ என்றில்லாமல், தபால் ஊழியர்கள் சமூக அக்கறையோடு பணியாற்றி வருகின்றனர் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு.
முதியோர் உதவித்தொகையை பயனாளிகளிடம் நேரடியாகப் பட்டுவாடா செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. வீட்டு வேலைக்கு அல்லது மருத்துவமனைக்குச் சென்று விடுவார்கள். இதில், பிச்சை எடுப்பவர்களும் கூட உண்டு. அவர்களைத் தேடிச்சென்று உதவித்தொகையை வழங்குகிறோம். ரயில்வே, வங்கி, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி. என போட்டித் தேர்வுகள் தொடர்பான தபால்களுக்காக இளைஞர்கள் காத்திருப்பார்கள். மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விக்கான கவுன்சலிங் பற்றிய தபால்களை மாணவர்கள் எதிர்பார்த்திருப்பார்கள். இளைஞர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால், அதை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய முயற்சிப்போம். சில தபால்களில் சரியான முகவரி இருக்காது. அதன் காரணமாக, ஓர் இளைஞர் பாதிக்கப்பட்டு விடுவாரே என்கிற படபடப்பு எங்களைத் தொற்றிக்கொள்ளும். எவ்வளவு சிரமப்பட்டாவது சரியான முகவரியைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் சேர்த்துவிடுவோம். நம்மால் மற்றவர்களுக்கு நல்லது நடக்கிறதே என்கிற திருப்திதான்" என்று புன்னகைக்கிறார், அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் கோபு கோவிந்தராஜன். இவர், சென்னை கோட்டூர்புரம் அஞ்சல் நிலையத்தில் தபால்காரராகப் பணிபுரிகிறார்.
தெளிவற்ற கையெழுத்துக்களால் முகவரி எழுதப்பட்ட கடிதங்கள், தபால் ஊழியர்களைத் திக்குமுக்காட வைக்கின்றன. முகவரி தெளிவாக இல்லை என்ற காரணத்தைச் சொல்லி அக்கடிதத்தை அவர்கள் மூலையில் தூக்கி வீசிவிடுவதில்லை. தடயவியல் வல்லுநர்கள் அளவுக்கு யோசித்து முகவரியைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் சேர்க்கிறார்கள்.
கதவிலக்கம் 14 என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்தது. நேரில் சென்று பார்க்கும்போது அந்த முகவரி தவறானது என்பது தெரிய வந்தது. அது என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது, 1A என்பதைத்தான் 14 என்று எழுதியிருப்பார்களோ என்று நினைத்தேன். மறுநாள் காலையில் 1A என்ற முகவரியைத் தேடிச் சென்றேன். அதுதான் சரியான முகவரி. மிகவும் சிரமப்பட்டு முகவரியைக் கண்டுபிடித்து கடிதத்தைக் கொடுத்தேன். ‘என்ன... இவ்வளவு லேட்டா வந்து கொடுக்குறீங்க?’ என்று அந்த வீட்டுக்காரர் கோபமாகக் கேட்டார்" என்று வருத்தப்படுகிறார், திருச்சியைச் சேர்ந்த தபால்காரர் சங்கரசுப்பு.
குடிசைப்பகுதி வீடுகளுக்கு கதவிலக்கம் கிடையாது. ஆனால், குப்புசாமி என்கிற பெயரில் ஒரு தபால் வந்தால், அதை உரிய நபரிடம் கொண்டுபோய் சேர்ப்பது மிகவும் சிரமம். ஏனெனில், அத்தெருவில் குப்புசாமி என்கிற பெயரில் 10 பேர் இருப்பார்கள். ஒவ்வொரு ஆளாக விசாரித்து சரியான நபரிடம் கொண்டுபோய்க் கொடுப்போம். குடிசைப்பகுதி மக்களின் பிள்ளைகளும் கல்லூரிகளுக்குச் செல்கிறார்கள். அடுத்தநாளே பணம் கட்ட வேண்டும் என்று கல்லூரியில் இருந்து தபால் வரும். எனவே, கஷ்டப்பட்டு ஆளைக் கண்டுபிடித்து தபாலைக் கொடுப்போம்" என்கிறார், பாரிமுனை பகுதியில் பணியாற்றும் தபால்காரர் ஒருவர்.
அதீதமான தமிழார்வம் கொண்ட சிலராலும் இவர்கள் அவ்வப்போது அவஸ்தைகளை அனுபவிப்பதுண்டு.
பல தெருக்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் உள்ளன. அதை தமிழார்வம் கொண்ட சிலர் அப்படியே தமிழ்ப்படுத்தி எழுதிவிடுவார்கள். உதாரணமாக, South lock street என்கிற ஒரு தெரு உள்ளது. அதை, ‘தெற்கு அடைப்புச்சாலை’ என்று குறிப்பிட்டு ஒரு தபால் வந்தது. நான் நீண்ட நேரம் யோசித்து, அது South lock street என்பதைக் கண்டுபிடித்தேன். ‘பிராட்வே ரோடு’என்பதை, ‘அகலச் சாலை’ என்று தமிழ்ப்படுத்தி ஒரு கடிதம் வந்தது. அதையும் ஒரு வழியாகக் கண்டுபிடித்தோம்" என்று சிரிக்கிறார், பாரிமுனை பகுதியில் பணியாற்றும் தபால்காரர் ஒருவர்.

நாய்த் தொல்லை
தபால்காரர்களுக்கு பெரும் தொல்லையாகவும் அச்சுறுத்தலாகவும் இருப்பது நாய்கள்தான்.
எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினை நாய்கள்தான். பங்களா கதவுகளைத் திறந்து உள்ளே சென்றால் ஆளுயர நாய் நம்மை முறைத்துப் பார்க்கும். எங்களுக்கு குலையே நடுங்கி விடும். பணத்திமிர் பிடித்த சிலர், கடிதங்களை வாங்கிவரச் சொல்லி நாயை ஏவி விடுவார்கள். தபாலை வாயில் கவ்விக்கொண்டு எஜமானரிடம் போய் அந்த நாய் கொடுக்கும். நாய் கடித்து இறந்தவர்களும் உண்டு. அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடோ, நிதியுதவியோ கிடையாது" என்கிறார், கோபு கோவிந்தராஜன்.

நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. அங்கு வசிப்பவர்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயர் கூட தெரியாது. வீட்டு எண் குறிப்பிடப் படவில்லை என்றால், வீட்டைக் கண்டுபிடிக்க சிரமப்படுவோம். மேலும், மின்வெட்டு நேரத்தில் லிஃப்ட் வேலை செய்யவில்லை என்றால், பல மாடிகள் ஏறி இறங்க வேண்டும். கூரியரில் தபால் அனுப்பினால் மட்டும் அலைபேசி எண்களை மக்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல, அஞ்சல் துறை மூலம் அனுப்பும் தபால்களிலும் அலைபேசி எண்களைக் குறிப்பிட்டால்  சிரமமில்லாமல் தபால்களை சேர்த்து விடுவோம்" என்று கூறுகிறார், கோவையைச் சேர்ந்த தபால்காரர் குப்புராஜ்.

சைக்கிள் சவாரி
சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல்துறை, மின் வாரியம், வருவாய்த் துறை எனப் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களில் பலரும் மோட்டார் சைக்கிளுக்கு மாறிவிட்டனர். ஆனால் நகரங்கள், கிராமங்கள், மலைப்பிரதேசங்கள் என எப்பகுதியாக இருந்தாலும் சைக்கிளிலேயே சென்று கடமையாற்றுபவர்களாக தபால் ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். தினமும் 60-70 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணிக்கும் தபால்காரர்களும் உண்டு. நகரங்களில் போக்குவரத்து நெருக்கடி, கிராமப் புறங்களில் வயல் வரப்புகள், முள் பாதைகள், ஒத்தையடிப் பாதைகள், குண்டும் குழியும் நிறைந்த சாலைகள், எதிர்க் காற்று, மழை, வெயில் என ஒவ்வொரு நாளும் சவால்கள் நிறைந்த பயணத்தை தபால்காரர்கள் மேற்கொள்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் வாங்கும் அளவுக்கு வசதி இல்லை. அப்படியே வாங்கினாலும்  தினமும் பெட்ரோலுக்கு செலவழிக்கும் அளவுக்கு எங்களுக்கு ஊதியம் கிடையாது. மேலும், எங்களுடைய வேலைக்கு சைக்கிள்தான் சரியான வாகனம். கிராமப்புறங்களில் குண்டும் குழியுமான சாலைகளிலும், வயல் வரப்புகளிலும் உருட்டிக்கொண்டு செல்வதற்கு சைக்கிள்தான் வசதி. எனவே, அதை மட்டும் எங்களால் மாற்றிக்கொள்ள முடியாது" என்கிறார், சேலத்தைச் சேர்ந்த தபால் ஊழியர் ராஜசேகரன்.

இ.டி. ஊழியர்கள்
தபால்துறை ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசு ஊழியர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அஞ்சல் துறையில் இந்தியா முழுவதும் 6 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் 2.5 லட்சம் பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்கள். மீதி 3.5 லட்சம் பேர், இ.டி. ஊழியர்கள் (Extra Departmental Agents). அதாவது, பணி நிரந்தரமற்றவர்கள். 2011 மார்ச் 31 கணக்குப்படி, இந்தியாவில் 1,54,866 அஞ்சலகங்கள்  செயல்படுகின்றன. அவற்றில் இ.டி. அஞ்சலகங்கள் (Extra Departmental Post Offices) என்று அழைக்கப்படுபவை 1,29,402.

இ.டி. ஊழியர்களுக்கு தினமும் 4 மணி நேரம் மட்டுமே வேலை என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள், பல மணி நேரம் பணி செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 7 - 8 கிராமங்களுக்குச் செல்கிறார்கள். நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றும் இவர்களுடைய மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா? 5,000 ரூபாய். அவ்வளவுதான். விடுமுறை கிடையாது. சம்பள உயர்வு கிடையாது. போனஸ் கிடையாது. பென்ஷன் கிடையாது. மருத்துவ வசதி கிடையாது. தொப்பி கிடையாது. சீருடை கிடையாது. மழைக்கோட் கிடையாது. எதுவும் கிடையாது.

கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் இ.டி. ஊழியர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 1,000 இ.டி. ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் பலர் தினமும் அரக்கோணம், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி உட்பட நீண்டதூரப் பகுதிகளில் இருந்து தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றனர். ஒரு காலத்தில், கௌரவப் பதவியாக இ.டி. போஸ்ட் மாஸ்டர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக்கீழ் இ.டி. போஸ்ட் மேன்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது, அவர்களில் பெரும்பான்மையோர் விவசாயம் செய்துகொண்டு, இதை பகுதிநேர வேலையாக செய்து வந்தனர். ஆனால், இப்போது விவசாயத் தொழில் மறைந்து வருவதால், முழுக்க முழுக்க தபால்துறைப் பணியை மட்டுமே அவர்கள் சார்ந்துள்ளனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது பல ஆண்டுகாலக் கோரிக்கை. அதற்காக தேசிய அளவில் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பணி நிரந்தரம் என்கிற அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாத வரையில், பெருமைமிகு இந்திய அஞ்சல் துறைக்கு அதுவொரு கரும்புள்ளியாகவே இருக்கும்.