OTP மூலம் செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க புதிய வசதி
ஆதார் எண்ணையும் செல்போன் எண்ணையும் OTP எனப்படும் ரகசிய குறியீட்டு எண் மூலமே இணைக்கும் முறை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற ரேஷன் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, வங்கிக் கணக்கு ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை அறிவுறுத்திய மத்திய அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் பிப்ரவரி 6ஆம் தேதி கடைசிநாள் என கூறியுள்ளது.
இதையடுத்து, பல்வேறு செல்போன் வாடிக்கையாளர்கள், தங்களது செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வரும் நிலையில், ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இன்னும் பலர் செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க செல்போன் சேவை வழங்கும் முகவர்கள் சிலர் கட்டணம் வசூலிப்பதாலும், இதில் பிரச்சனை உள்ளது. அதேபோல், சில நேரங்களில் பயோ மெட்ரிக் இயந்திரம் பழுதாவதும், ஆதார் எண்ணை செல்போன் எண்ணுடன் இணைக்க நீண்டதூரம் செல்ல வேண்டும் என்பதாலும் பலர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஓ.டி.பி. எனப்படும் ரகசிய குறியீட்டு எண் மூலம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்புவோர், இலவச வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்தால், அதில் வரும் நடைமுறைகளை பின்பற்றினால், ஓ.டி.பி. எண் குறிப்பிட்ட எண்ணுக்கு வரும் என்றும், அதன் மூலம் ஆதார் எண்ணை, செல்போன் எண்ணுடன் இணைத்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment