ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.....
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது.
தமிழகத்தி வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.
அவர் கூறிய தகவல்கள் அறியாமையில் வெளிப்பட்டவை என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயம் என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை ஏற்றுக் கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். முந்தைய அமைச்சர்களைப் போல பிடிவாதம் பிடிக்காமல் தவறை ஒப்புக்கொண்டதுடன், அதை திருத்திக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக அறிவித்திருப்பது நல்ல அறிகுறியாகத் தோன்றுகிறது.
அதேநேரத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்படும் சமூக அநீதி ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதால் மட்டும் தீர்ந்து விடாது. ஆசிரியர் தகுதித் தேர்வே சமூக நீதிக்கு எதிரானது; அத்தேர்வு ஒழிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
ஆனால், அது உடனடியாக சாத்தியமில்லை என்பதால் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்; அதில் எடுக்கப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கக் கூடாது; இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனியாக தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியது. அதையேற்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 5% குறைத்த அரசு, அதற்குப் பதிலாக ஆசிரியர்கள் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தியது தான் அநீதியாகும்.
வெயிட்டேஜ் மதிப்பெண் முறைப்படி தகுதித் தேர்வு மதிப்பெண்களில் 60 விழுக்காடு மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மீதமுள்ள 40% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு, பட்டப்படிப்பு, பி.எட். தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
12- வகுப்பு பொதுத்தேர்வாக இருந்தாலும், பட்டப்படிப்பாக இருந்தாலும் 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டதை விட இப்போது தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் படிப்பு படித்தவர்களை விட, இப்போது ஆசிரியர் படிப்பு படித்தவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகவும் எளிதாக தேர்ச்சி பெறுவர். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைக்காது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர்கள் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12-ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருந்ததால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய வினோத முறை கடைபிடிக்கப்படுவதில்லை. பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வு மதிப்பெண்களில் நம்பிக்கை இல்லாமல் தான் தகுதித் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால், தகுதித் தேர்வு மதிப்பெண்களில் முழு நம்பிக்கையில்லாமல் அதில் 60% மதிப்பெண்களையும், பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் 40% மதிப்பெண்களையும் எடுத்துக் கொள்வது கேலிக்கூத்தானது. இது தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே சிதைத்துவிடக் கூடியதாகும்.
எனவே, ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் தகுதித் தேர்வு முறையையும் ரத்து செய்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment