பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
இந்தியாவிலேயே திரைப்பட நடிகராக இருந்து, அரசியலில் களமிறங்கி, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் எஸ்.எஸ். ராஜேந்திரன்தான்.
1947-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன இவர், தொடக்க காலத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 1952-ஆம் ஆண்டு கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான, "பராசக்தி"யில் நடிகர் சிவாஜிகணேசனின் சகோதரனாக நடித்து புகழ் பெற்றார்.
இதன் பின்னர், 1957-ல் வெளியான "முதலாளி" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே" என்ற பாடல், ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றது.
இதன் பின்னர், அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. 1958-ல் இவர் நடித்த "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற படம் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர், அவருடன் "ராஜா தேசிங்கு", "காஞ்சித் தலைவன்" உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எனினும் நடிகர் சிவாஜிகணேசனுடன்தான் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
"குங்குமம்", "பச்சை விளக்கு", "கை கொடுத்த தெய்வம்", "சாரதா" போன்ற பல படங்கள், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு புகழை தேடி தந்தன. 1950 மற்றும் 60-களில் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் புகழ்பெற்றிருந்தார்.
1960-ல் "தங்க ரத்தினம்" என்ற படத்தை இயக்கிய ராஜேந்திரன், அதில் கதாநாயகனாகவும் நடித்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். கணீர் குரல், தெளிவான உச்சரிப்பு, நீண்டவசனத்தை ஒரே மூச்சில் பேசி முடிக்கும் திறமை போன்றவற்றின் காரணமாக, வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட படங்களில் அதிக அளவில் நடித்தார்.
கருணாநிதியின் கதை வசனத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன், திராவிடக் கொள்கைகள் மீது தீவிர பற்றுக் கொண்டவராக திகழ்ந்தார். தமது கொள்கைகளை தாம் நடித்த திரைப்படங்களிலும் கடைபிடித்தார்.
இதன் காரணமாக, "லட்சிய நடிகர்" எனவும் புகழப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, திமுகவில் இணைந்த அவர், 1962-ஆம் ஆண்டு தேனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவிலேயே திரைப்பட நடிகராக இருந்து, அரசியலில் களமிறங்கி, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் எஸ்.எஸ். ராஜேந்திரன்தான்.
திமுக சார்பில் 1970 முதல் 1976-ஆம் ஆண்டுவரை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இதன் பின்னர், அதிமுகவில் இணைந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1980 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
No comments:
Post a Comment