Friday, April 11, 2014

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு தர மத்திய, மாநில அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவை ஊழியர்கள் சங்கங்கள் எடுத்துள்ளன.

மத்திய, மாநில அரசுப் பணிகளில் சுமார் 1.50 கோடிக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப் பட்டு வந்தது. இதன்மூலம் ஊழியர் களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது. ஓய்வு பெற்ற பின்பு அடிப்படை சம்பளத் தில் 50 சதவீதம் ஓய்வூதியம் அளிக்கப்பட்டது.


கடந்த 2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, ‘பங்களிப்பு ஓய்வூதியம்' என்ற புதிய திட்டத்தை கொண்டுவர முயற்சித்தது. அதன்படி நாடாளு மன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பால் மசோதா கிடப்பில் போனது.

அதன்பிறகு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து பாஜக ஆதரவுடன் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு ஆதரவு அளித்து வாக்களித்தது.

பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் இல்லை

புதிய ஓய்வூதிய திட்டப்படி ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப் படுகிறது. அத்துடன் அரசு அளிக் கும் 10 சதவீதம் தொகை மற்றும் 8 சதவீத வட்டியுடன், ஊழியர்கள் ஓய்வுபெறும்போது மொத்த தொகையாக (செட்டில்மென்ட் தொகை) அளிக்கப்படும். அதன் பின்னர் எந்தவிதமான தொகையும் மாத ஓய்வூதியமாக கிடைக்காது. பணியில் இருக்கும்போது ஊழியர்கள் இறந்தால், அவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் போன்ற சலுகைகள் இல்லை.

இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் இந்த பிரச்சினையை எழுப்ப மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஊதிய முறையை கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தவுள்ளன. இந்த கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளன.

இதற்கான முடிவு கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த அகில இந்திய மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘முதலில் அமெரிக்கா, சிலி போன்ற வளர்ந்த நாடுகளில்தான் இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது தோல்வியில் முடிந்தது. ஊழியர்களின் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யவே அந்தந்த நாடுகளில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.

பங்கு சந்தையில் கிடைக்கும் பணத்தை பெரிய நிறுவனங்கள் கடன் பெற்று பல்வேறு தொழில்களை செய்யும். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் ஜி.எம் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு கடன் அளிக்கப்பட்டது. அந்த நிறுவனம் பெரும் நஷ்டம் அடைந்தது. இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் நிதி நெருக்கடியும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஓய்வூதிய திட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பானதல்ல.

எனவே, புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த வாக்குறுதியை தரும் அரசியல் கட்சிகளுக்கே ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த 4-ம் தேதி நாக்பூரில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய அளவில் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளாக இருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சங்கங்களின் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்’’ என்றார்

No comments:

Post a Comment