Thursday, October 18, 2012

தலையங்கம் !


ஏன் தயங்குகிறார்கள்? - தினமணி தலையங்கம்!

இந்திய அஞ்சல் துறையை புதுமைப்படுத்தும் புதிய கொள்கை நிகழாண்டில் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் அஞ்சல் நிலையங்கள் வங்கிகளாக மாறும், கூரியர் நிறுவனங்கள் அஞ்சல் துறையில் பதிவுசெய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். இவர் பொறுப்பேற்ற நேரத்திலும்கூட இதையேதான் சொன்னார். இப்போதும் சொல்கிறார்.
அஞ்சல் நிலையங்களின் மிக முக்கியப் பணியான கடிதங்கள், பார்சல்கள் பட்டுவாடா செய்வது கூரியர் நிறுவனங்களின் வருகையால் பாதிக்கும் மேலாகக் குறைந்து மிகப்பெரும் வருவாய் இழப்பை அஞ்சல்துறை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பல கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போதுதான், கூரியர் நிறுவனங்கள் பதிவுசெய்த நிறுவனமாக உரிமம் பெற்றால் மட்டுமே செயல்பட முடியும் என்கிற கட்டாயத்தை உருவாக்குவது பற்றி சிந்திக்கிறார்கள்.
கூரியர் நிறுவனங்கள் வருகையால் மிகப்பெரும் வருவாய் இழப்பைச் சந்திக்க நேர்ந்ததை உணர்ந்துகொண்ட அரசு, 2002-ம் ஆண்டிலேயே இந்திய அஞ்சல் அலுவலகம் (திருத்த) வரைவு மசோதாவை தயாரித்து மக்கள் கருத்துக்காக வெளியிட்டது. இதில் முக்கியம் தரப்பட்ட இரண்டு விஷயங்கள்: ஒன்று- கடிதம் என்பதற்கு வரையறை என்ன? இரண்டு- அஞ்சல் செய்யப்படும் பொருளைச் சேகரித்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல் ஆகிய சேவைகளைச் செய்வோர் பதிவு செய்த நிறுவனங்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த வரைவு மசோதா வெளியானபோது கூரியர் நிறுவனங்கள் 2002-ம் ஆண்டிலேயே எதிர்ப்பு தெரிவித்தன. அஞ்சல் செய்யப்படும் பொருள் எடை 500 கிராமுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே கூரியர் நிறுவனங்கள் அதைக் கொண்டு செல்ல அனுமதிக்கலாம் என்கின்ற நிபந்தனை இந்த மசோதாவில் இருக்கிறது. இது கூரியர் நிறுவனங்களுக்கு எதிரானது என்று குரல் கொடுத்தார்கள். லைசன்ஸ் ராஜ் தலையெடுக்கிறது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன் பிறகு மத்திய அரசு, இந்தச் சட்டத் திருத்தம் பற்றிப் பேசவே இல்லை. இப்போது ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, இதே விவரத்தை மத்திய அமைச்சர் கபில் சிபல் கையில் எடுத்திருக்கிறார்.
அஞ்சல் அலுவலக (திருத்த) சட்டம் என்பது வெறுமனே அஞ்சல் துறையின் வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கான சட்டம் என்று சொல்லிவிட முடியாது. இதில் நுகர்வோர் நலனுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது என்பதுதான் இதன் சிறப்பு.
மீண்டும் 2006ம் ஆண்டு, இந்திய அஞ்சல் அலுவலக(திருத்த) சட்டத்திலும் இதே விஷயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இந்த வரைவு மசோதாவில் கடிதம் என்பது என்ன என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. எடை குறித்த நிபந்தனைகள் மாறுதலுக்கு உட்பட்டாலும், கடிதம் என்றால் என்ன என்ற வரையறைதான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கடிதங்களை, அஞ்சல் பொருள்களை சேகரிக்க, விநியோகிக்க, கொண்டு செல்ல விரும்பும் நிறுவனங்கள் அஞ்சல்துறையிடம் பதிவு செய்தால் மட்டுமே இந்த சேவைத் தொழிலில் ஈடுபட முடியும். இந்த நிறுவனங்களின் சேவைக் குறைபாடு தொடர்பாக புகார் வந்தால், அல்லது அஞ்சல்துறை கண்டறிய நேர்ந்தால் இந்த நிறுவனத்தின் பதிவை/அங்கீகாரத்தை ரத்து செய்துவிட முடியும்.
மேலும், சேவையில் குறைபாடு இருந்தால் அஞ்சல் துறையின் நடுவர் மன்றத்தில் நுகர்வோர் முறையிட முடியும். ஒரு கூரியர் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.25 லட்சத்துக்கும் அதிகம் என்றால், அந்த நிறுவனத்தின் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கும் வகையில், ஆண்டு விற்றுமுதலில் 10 விழுக்காட்டினை அஞ்சல்துறையிடம் முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றெல்லாம் சில நல்ல நிபந்தனைகள் அந்த வரைவு மசோதாவில் இருந்தன.
அதனை அப்போதே அமலுக்குக் கொண்டு வந்திருந்தால், இந்நேரம் அஞ்சல் துறைக்கு மிகப்பெரிய அதிகாரமும், இவர்களைக் கட்டுப்படுத்தும் திறனும் ஏற்பட்டிருப்பதோடு, இவர்களுடன் போட்டியிட சமவாய்ப்பும் உருவாகியிருக்கும். ஆனால் மத்திய அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது இந்தியாவில் மிகப்பெரிய தொடர் சங்கிலி அலுவலக வசதிகள் கொண்ட கூரியர் நிறுவனங்கள் சுமார் 50 உள்ளன. இந்த நிறுவனங்களுடன் சேர்ந்தும், தனித்தும் செயல்படும் நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 2800 உள்ளன. இந்த ஆண்டும்கூட இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வராவிட்டால், அஞ்சல்துறையை மீட்பது மிகவும் கடினம்.
இந்த அஞ்சல் அலுவலக திருத்த வரைவு மசோதாவில், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தையும்,கணினி பயன்பாட்டையும் கருத்தில்கொண்டே டிரான்ஸ்மிஷன் அல்லது டெலிவரி என்ற வார்த்தைகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு முழுமையாக, யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் நிறைவேற்றி அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவில் 1.55 லட்சம் அஞ்சல் கிளைகள் உள்ளன. அதாவது, நாட்டுடைமையாக்கப்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையைவிட இது அதிகம். ஆனால் இன்னும், இந்திய அஞ்சல் நிலையங்களை, வங்கியாக மாற்றுவதற்கு நிதியமைச்சரிடம் கடிதம் எழுதியிருக்கிறோம், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கேட்டிருக்கிறோம் என்று ஏதோ தனியார் நிறுவனம் போல இந்திய அஞ்சல் துறை ஏன் பரிதாபக் குரல் எழுப்புகிறது என்று புரியவில்லை.
இந்திய அஞ்சல் துறைபோன்று உள்கட்டமைப்பு உள்ள அரசுத் துறை வேறு எந்த நாட்டிலும் இந்த நூற்றாண்டில் இருக்கிறதா என்பது சந்தேகம். வெறும் 50 காசுகளில் தொலைபேசியில் பேசலாம். ஆனால் எழுத்துப்பூர்வமான பதிவு 50 காசுகளில் முடியும் என்றால் ஒரு அஞ்சல் அட்டை போதும். இவ்வளவு அற்புதமான ஒரு துறையைக் காப்பாற்றப் போகிறார்களா? கைவிடப் போகிறார்களா?

நன்றி : தினமணி

1 comment: